தமிழ்நாடு

பள்ளிக்குச் சென்ற மாணவி ஏரியில் இருந்து சடலமாக மீட்பு – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளிக்குச் சென்ற மாணவி ஏரியில் இருந்து சடலமாக மீட்பு – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

webteam

பர்கூர் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அஞ்சூர் ஊராட்சி மோடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகள் பார்கவி (17). இவர், ஐகுந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி மீண்டும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பார்கவியுடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தேடியுள்ளனர்.

இதையடுத்து மாணவி நேற்று பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் இடையே இன்று மாலை ஜகுந்தம் ஏரியில் பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற பார்கவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சடலமாக இருப்பது பார்கவி என உறுதி செய்தனர்.

இதையடுத்து பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மாணவி நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் பாதையை தவிர்த்து எப்படி ஏரி பகுதிக்கு வந்தார், அவரே வந்தாரா அல்லது வேறு யாராவது அழைத்து வந்தார்களா? மாணவியின் இறப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி ஏரியில் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.