தமிழ்நாடு

மாணவிகளை கிண்டல் செய்த +2 மாணவன்.. கண்டித்த தலைமை ஆசிரியரின் மண்டை உடைப்பு!

webteam

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் என இருபாலரும் பயில கூட இந்த பள்ளியில் கண்டமங்கலத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் சக மாணவிகளை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்ததாகவும், இதனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான சேவியர் சந்திரகுமார் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பள்ளியில் இருந்த சக மாணவிகளை கிண்டல் செய்த அந்த மாணவரை அழைத்து தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரின் தலையில் பலமாக தாக்கியிருக்கிறார்.

இதில் சேவியர் சந்திரகுமாரின் தலையில் இருந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. இதனையடுத்து படுகாயம் அடைந்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார், அருகில் உள்ள அரியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே தலைமை ஆசிரியை தாக்கி மண்டையை உடைத்த 12ம் வகுப்பு மாணவரிடமும் அவரது பெற்றோரிடமும் இன்று கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அந்த மாணவனுக்கு டிசியை கொடுத்து பள்ளியை விட்டு அனுப்புவதா அல்லது வேறு என்ன விதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

பின்னர், தலைமை ஆசிரியர்  சேவியர் சந்திரகுமாரை தாக்கிய பனிரெண்டாம் வகுப்பு மாணவன் மீது பெண்களை கேலி செய்தல் மற்றும் அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட  இரு பிரிவின் கீழ் கண்டமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அத்துடன், மாணவனை பள்ளியிலிருந்து இடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, மாணவிகளை கேலி, கிண்டல் செய்ததோடு அல்லாமல் தட்டிக்கேட்ட தலைமை ஆசிரியரின் மண்டையை மாணவர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.