சென்னை கந்தன்சாவடியில் கட்டுமானப்பணியின் போது இரும்பு சாரம் சரிந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் தனியார் மருத்துவமனைக்காக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டடத்துக்கு ஜெனரேட்டர் வைக்கும் பணிக்காக இரும்புக் கம்பிகளால் சாரம் கட்டப்பட்டிருந்தது. சாரத்தில் நின்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 32 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். நேற்றிரவு எட்டு மணியளவில் திடீரென சாரம் சரிந்து விழுந்தது. அதில் நின்று வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் கனத்த இரும்பிக் கம்பிகளுக்கு கீழ் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கம்பிகளை நவீன இயந்திரங்கள் மூலம் அறுத்து அதனடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 32 பேர் உயிருடனும், ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர் பீகாரை சேர்ந்த பப்லு என்பது தெரியவந்தது. காயமடைந்த 28 பேருக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இடிபாடுகளை அகற்றம் பணி நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனம் மீது தரமணி காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பொறியாளர்கள் சிலம்பரசன், முருகேசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து பப்லு என்பவர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.