சென்னை கந்தன்சாவடியில் கட்டுமானப் பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை கந்தன்சாவடி எம்.ஜி.ஆர். சாலையில் தனியார் மருத்துவமனைக்காக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டடத்துக்கு ஜெனரேட்டர் வைக்கும் பணிக்காக இரும்புக் கம்பிகளால் சாரம் கட்டப்பட்டிருந்தது. சாரத்தில் நின்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 32 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். நேற்றிரவு எட்டு மணியளவில் திடீரென சாரம் சரிந்து விழுந்தது. அதில் நின்று வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் கனத்த இரும்பிக் கம்பிகளுக்கு கீழ் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கம்பிகளை நவீன இயந்திரங்கள் மூலம் அறுத்து அதனடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 31 பேர் உயிருடனும், ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர் பீகாரைச் பப்லு என்பது தெரியவந்தது. காயமடைந்த 28 பேருக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாரம் சரிந்து விழுந்ததில் அருகில் இருந்த 2 வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி கட்டுமானப் பணிகள் நடைபெற்றதே விபத்துக்கு காரணம் என்று புதிய தலைமுறையிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.