தமிழ்நாடு

டிடிவிக்கு கிடைக்குமா குக்கர் சின்னம்..? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

Rasus

குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அது ரத்து செய்யப்பட்டது. அப்போது திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் வகையில், தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

முன்னதாக இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தெரிவித்திருந்தது. பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது எனவும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.