சட்டப்பேரவையில் நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் உள்ளதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக் கோரி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வாக்கெடுப்பின் போது என்ன முறைகேடு நடைபெற்றது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எம்எல்ஏக்கள் தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டனர் என்றும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டதாகவும் வழக்கறிஞர் வாதிட்டார்.
அப்போது சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டத்தில் இடம் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் தங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும்படி அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வரும் 11-ம் தேதி விரிவான விசாரணை நடத்தப்படும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.