விவசாயிகள் மரணத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகள் தொடர் தற்கொலைகள் தொடர்பாக தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகளைக் காப்பது மாநில அரசுகளின் கடமை என்று கருத்து தெரிவித்தனர். விவசாயிகள் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று கூறிய நீதிபதிகள், கடும் வறட்சி நிலவும் சூழலில் விவசாயிகளைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையினை மே மாதம் 2ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினத்துக்கே வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
மகராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழகத்தைப் போலவே கடும் வறட்சி நிலவுவதாக வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதத்தினை முன்வைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கினை நீர்த்துப்போகச் செய்ய விரும்பவில்லை என்றும் தமிழக விவசாயிகள் வழக்கினை பிரத்யேகமாக விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நூற்றுக்கணக்கான வழக்குகளைப் போல இது இல்லை என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனிதாபிமானம் குறித்த பல்வேறு கேள்விகளை இந்த வழக்கு எழுப்பியுள்ளதாகத் தெரிவித்தனர். விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 31 நாட்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.