காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. என்ன தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் இப்போதே எழுந்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட வாதம் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 20-ம் தேதி வாதங்கள் முடிவடைந்த பின்னர், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இவ்வழக்கு விசாரணையின் போது நடுவர் மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். ஆனால், மத்திய அரசு அமைக்க மறுத்துவிட்டது. விசாரணையின் இடையே, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி பல இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தாலும், கர்நாடக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், இறுதி வாதங்கள் முடிந்து 150 நாட்களுக்கு பின்னர் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பை தமிழக விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் இரண்டு விதமான தீர்ப்புகளை வழங்க வாய்ப்புள்ளது.
முதலாவது நடுவர் மன்ற தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொண்டு நதிநீர் பங்கீடை அதன் அடிப்படையில் செயல்படுத்த உத்தரவிடுதல் மற்றும் காலக்கெடு நிர்ணயித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுதல்.இரண்டாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு, நடுவர் மன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடுவது; இடைப்பட்ட காலத்துக்கு நடுவர் மன்ற தீர்ப்பு அடிப்படையில் நதிநீரை பங்கீடு செய்ய உத்தரவிடுவது.
சட்ட வல்லுநர்கள் இது குறித்து கூறுகையில், நடுவர் மன்ற தீர்ப்பு பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து கொடுக்கப்பட்டது என்றும், உச்சநீதிமன்றம் அதனை ரத்து செய்யாமல் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தவே வாய்ப்பு அதிகம் என்கின்றனர். ஆக, 2007-ல் கொடுக்கப்பட்ட நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தி, தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பை உச்ச நீதிமன்றம் நிறவேற்ற வாய்ப்புள்ளது.இதனிடையே, தீர்ப்பு வெளியான பின்னர், இரு மாநிலங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.