நெல்லையில் பட்டியலின இளைஞர் வெட்டிக் கொலை முகநூல்
தமிழ்நாடு

நெல்லையில் பட்டியலின இளைஞர் வெட்டிக் கொலை; ஆணவக் கொலை? கைதானவரின் பரபரப்பு வாக்குமூலம்!

நெல்லையில் நேற்று ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில், இது ஆணவக்கொலையா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஜெனிட்டா ரோஸ்லின், PT WEB

செய்தியாளர்: மருதுபாண்டி

பலமுறை கண்டித்தும் கேட்காததால் வெட்டிக்கொன்றேன் என்று நெல்லையில் ஐடி ஊழியர் கொலை வழக்கில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருப்பது கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

வெட்டிக்கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயியான இவருக்கு மகன் 26 வயதான கவின்குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறர். இந்நிலையில், சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், அவரது தாத்தாவுக்கு வைத்தியம் பார்ப்பதற்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு சித்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.

தொடர்ந்து தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் வரை அந்த தெருவில் நின்று கொண்டிருந்த கவின்குமாரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த தெருவில் வைத்து அவரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் உயிரிழந்து கிடந்த கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆணவக் கொலையில் சிக்கிய போலீஸ் குடும்பம்?

மேலும் இதுகுறித்து , அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் யார் என்பது குறித்த தகவல் கிடைத்தது.

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் 24 வயது மகனான சுர்ஜித் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சுர்ஜித்தின் தந்தையான சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிவதும் தெரியவந்தது. இதையடுத்து சுர்ஜித்தை சில மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. மேலும், எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை - கைதான 24 வயது இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

அப்போது அந்த 24 வயது இளைஞர் கொடுத்த வாக்குமூலம் கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதில், “ எனது அக்காவும், கவினும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தனர். அவர்கள் 2 பேரும் ஒன்றாக பழகி வந்தனர். அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அக்காவுடன் அவர் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. இதனிடையே எனது அக்கா பாளையகோட்டையில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவ மையத்தில் வேலை பார்ப்பதை அறிந்துகொண்டு அடிக்கடி சிகிச்சைக்காக யாரையாவது அழைத்துச்சென்று கவின் பேசி பழகி வந்தார்.

இதனை நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் நேற்றும் அதேபோல் மருத்துவமனைக்கு அவர் செல்வதை அறிந்து கொண்ட நான், அவரை பின்தொடர்ந்து சென்றேன். பின்னர் அவரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுத்தேன். ஆனால் அவர் பேசுவதை நிறுத்தமுடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் வெட்டிக்கொலை செய்தேன். “ என்று அந்த வாலிபர் கூறியிருக்கிறார்.

இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் தாய்-தந்தை தான் காரணம் என்றும், அவர்களையும் இந்த வழக்கில் தூண்டுதலாக செயல்பட்டதாக சேர்க்கவேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினருடன் சென்று புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கவினை சுர்ஜித் சகோதரி காதலித்தாரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த கவின் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் சுர்ஜித் சகோதரி மற்றும் கவின் இருவரும் காதலித்திருக்கும் பட்சத்தில் இது ஆணவக் கொலையாக மாற வாய்ப்பு உள்ளது. கைது செய்யப்பட்ட சுர்ஜித் சகோதரியிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. விசாரணைக்கு பிறகு இது தொடர்பான முழுமையான விவரங்கள் தெரிய வரும் என திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.