தமிழ்நாடு

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை: கைதானவரின் வங்கிக் கணக்கு ஏடிஎம் கார்டுகள் முடக்கம்

kaleelrahman

சென்னையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த ஹரியானா கொள்ளையர்களை சென்னை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளையர்களில் அமீர் அர்ஷ், வீரேந்தர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமீர் அர்ஷை ராயலாநகர் போலீசார் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீரேந்தரை டெல்லியில் வைத்து கைதுசெய்த போலீசார், இன்று இரவுக்குள் சென்னை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

கைதான அமீர், வீரேந்தருடன் சேர்ந்து ராமாபுரம், வடபழனி, சின்மயா நகர், பாண்டிஜார், வேளச்சேரி, தரமணி ஆகிய இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த 6 இடங்களுக்கும் ராயலா நகர் போலீசார் அமீரை நேரில் கொண்டு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இடத்தையும் அடையாளம் காட்டியதை காவல்துறை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

ஓயோ என்ற இணையதளம் மூலம் அமீர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் லாட்ஜ்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார். அங்கேயும் அமீரை கொண்டு சென்று விசாரணை நடத்தி அவர்கள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர். கொள்ளையடிப்பதற்காக கோடம்பாக்கத்தில் பைக்கை வாடகைக்கு எடுத்துள்ளது தெரிந்துள்ளது. அதனால் அந்த பைக்கை பறிமுதல் செய்யும் நடவடிக்கையிலும் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் அமீர் அர்ஷ் ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டம் பல்லப்கர்க் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளார் என்பதும், அதில் உள்ள வங்கிக் கணக்கு ஏடிஎம் கார்டை கொள்ளையடிக்க பயன்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த கார்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 2 ஏடிஎம் கார்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 3 ஏடிஎம் கார்டுகளின் வங்கி கணக்குகளும் ஹரியானாவில் இருக்கிறது. அந்த 3 வங்கிக் கணக்குகளையும் சென்னை காவல்துறையின் நடவடிக்கையால் முடக்கப் பட்டுள்ளது.

அமீரின் செல்போனை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களை கண்டறிய கூகுள் மேப்பை அமீர் பயன்படுத்தி உள்ளார். எந்த தேதிகளில் சென்னைக்கு வந்து கூகுள் மேப்பை பயன்படுத்தி இருக்கிறார் என்பதை காவல் துறையினர் கண்டறிந்து ஆதாரங்களை கைப்பற்றி உள்ளனர்.

ஆர்.சுப்ரமணியன்