தமிழ்நாடு

"வாயில் காயத்துடன் சுற்றிவரும் மக்னா யானையை காப்பது இயலாது" வனத்துறை மருத்துவர்கள்

jagadeesh

கோவை தடாகம் வனப்பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி வரும் யானைக்கு சிகிச்சையளித்து உயிரை காப்பது சிரமம் என வனத்துறை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதம் 15ஆம் தேதி வாயில் காயத்தோடு மக்னா யானை ஒன்றை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். கேரளா - தமிழக வனப்பகுதியில் சுற்றிவந்த அந்த யானையை இருமாநில வனத்துறையினரும் கண்காணித்து வந்தனர். மயக்க மருந்து கொடுத்து யானையை பரிசோதித்த போது, அதன் நாக்கு முழுவதுமாக துண்டாகி, வாய் சேதமடைந்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து மருந்துகள் கொடுக்கப்பட்டாலும், யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தடாகம் காப்புக்காடு பகுதியிலுள்ள சிறப்புக்குழு முகாமில் நுழைந்த யானை, அங்கிருந்த சமையல்கூடத்தில் நுழைந்து எரிவாயு சிலிண்டரை சேதப்படுத்த முயன்றதாலேயே அதனை விரட்டியதாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

காயமடைந்த யானை தற்செயலாக முகாமிற்கு வர நேரிட்ட போதும் அதற்கு சிகிச்சையளிக்காமல் வனத்துறையினர் விரட்டியதாகப் புகார் எழுந்தநிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.