தமிழ்நாடு

சத்தியமங்கலம்: ஊருக்குள் புகுந்து கரும்புத் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டுயானை

kaleelrahman

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை கரும்புத் தோட்டத்தை துவம்சம் செய்தது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இந்த நிலையில் இன்று அதிகாலை தாளவாடி அருகே உள்ள கோடம்பள்ளி கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை அப்பகுதியில் விவசாயி ரகு என்பவரது விளைநிலத்தில் பயிரிட்டுள்ள கரும்பு தோட்டத்துக்குள் நுழைந்து கரும்பு பயிர்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்து விவசாயிகள் ஒன்றிணைந்து கரும்பு தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானையை சத்தம் போட்டு வெகுநேரம் போராடி விரட்ட முயற்சித்தும் காட்டுயானை நகர முடியாமல் கரும்புத் தோட்டத்திலேயே முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தியது.

இதையடுத்து காட்டு யானையை விரட்டுவதற்காக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.