சாத்தனூர் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகத்தின் பாதுகாப்பில் உள்ள மீன்களை திருட்டுத்தனமாக மற்றவர்கள் பிடித்துச் செல்வதால் ஆண்டு தோறும் 3 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
பரந்து விரிந்திருக்கும் சாத்தனூர் அணைப்பகுதியில் மீன்களைப் பிடித்து விற்கும் பணியினை தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் கவனித்து வருகிறது. இதற்காக 40 மீனவக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இவர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 200 முதல் 250 கிலோ வரை மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ மீன்பிடிக்கும் ஒருவருக்கு 30 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. பிடிக்கப்படும் மீன்கள் திருவண்ணாமலை, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ 140 ரூபாய் என விற்கப்படுகிறது. இந்நிலையில் மீன் வளர்ச்சிக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வேப்பூர், தனிப்பாடி போன்ற ஊர்களை ஒட்டிய பகுதியில் மிகப்பெரிய வலைகளைக் கொண்டு மீன்களை திருடும் செயல் அரங்கேறி வருகிறது. மீன்வளர்ச்சிக் கழக கண்காணிப்புப் படை அதிகாரிகள் செல்லும் நேரத்தில் வலைகளை விட்டு விட்டு தப்பிச்செல்லும் அவர்கள், சில நேரங்களில் அதிகாரிகளை தாக்கவும் முற்படுகின்றனர். மீன் வளர்ச்சிக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நாள் ஒன்றிற்கு பிறர் 500 கிலோ வரை மீன்களை திருட்டுத்தனமாகப் பிடித்துச் செல்லப்படுவதால் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.