தமிழ்நாடு

“கமல் பேச்சு குறித்து அறிக்கை கொடுங்கள்” - தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு

webteam

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப் பதிவுக்காக ஐயாயிரத்து 508 தேர்தல் பணியாளர்களும், ஆயிரத்து 364 நுண் பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

பாதுகாப்புப் பணியில் ஆயிரத்து 300 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும், 15 ஆயிரத்து 939 காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது கமல் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது தொடர்பாக அரசியல் கட்சியினர் புகார் அளித்துள்ள நிலையில், கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்களை கேட்டுள்ளதாக கூறிய சாஹு, தேனி நாடாளுமனற உறுப்பினர் என அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் பெயர் கல்வெட்டில் இடம் பெற்றிருந்த விவகாரம் தொடர்பாக யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.