கரும்பு தேடி சாலைக்கு வந்த காட்டு யானைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பேருந்து பயணிகள் ஆர்வம் காட்டினர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து திண்பது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்வதற்காக அரசுப் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே அரசுப் பேருந்து சென்றபோது ஐந்து காட்டு யானைகள் சாலையோரம் நிற்பதை கண்டார். இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். அப்போது காட்டு யானைகள் சாலையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் வருகிறதா என நோட்டமிட்டபடி சுற்றித்திரிந்தன. இதைத் தொடர்ந்து சாலையோரம் நடமாடிய காட்டு யானைகளை பேருந்தில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆர்வம் காட்டினர். சிறிது நேரம் நடமாடிய காட்டி யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபின் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.