ஆசனூர் அருகே கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானையால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் தனது குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள், குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கோடிபுரத்தை சேர்ந்த மாதேவா (70) என்பவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது ஆம்புலன்ஸ் ஆசனூர் அடுத்த தமிழக- கர்நாடக எல்லை காரப்பள்ளம் அருகே சென்றபோது சாலையின் நடுவே கரும்பு லாரியை மறித்து காட்டுயானை நின்று கொண்டிருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரு மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
இதனால், சுமார் 1 மணி நேரம் சாலையில் யானைகள் முகாமிட்டிருந்ததால் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வழியிலேயே காத்திருந்தது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டியதால் மீண்டும் அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.