சென்னையின் அடையாளங்களுள் ஒன்று சத்யம் சினிமாஸ். நடிகர்களுக்கே கூட தங்களது படத்தின் போஸ்டர் சத்யம் சினிமாஸ் வாசலில் இருக்க வேண்டும் என்ற ஆசை இப்போதும் உண்டு. அப்படிப்பட்ட சத்யம் சினிமாஸின் உரிமை நிறுவனமான எஸ்.பி.ஐ சினிமாஸ் நிறுவனத்தை சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மால்களில் மல்டிபிளக்ஸ் வைத்துள்ள பி.வி.ஆர். நிறுவனம் வாங்குவதாக அறிவித்தது.
அறிவிப்பு வந்ததுதான் தாமதம். கொதிக்க ஆரம்பித்தனர் நெட்டிசன்கள். பலருக்கும் இந்த டீல் பிடிக்கவில்லை என்பதே அவர்களின் பதிவுகளின் இருந்து பார்க்க முடிந்தது.
நெட்டிசன்களின் ஆதங்கம் பெரும்பாலும் தியேட்டரில் வெளியாகும் படம் பற்றியெல்லாம் இல்லை. சத்யம் சினிமாஸ் என்ற பெயர் மாற்றப்பட்டு விடுமோ, அடையாள பெயர் காணாமல் போகுமோ என்ற நோக்கில் இருந்தது. இன்னும் பலர் தங்களுக்கு பிடித்த பாப் கார்ன் எங்கே பிவிஆர் பாப் கார்ன் போன்று மாறிவிடுமோ என்ற கோபத்தையும் வெளிப்படுத்தினர். குறிப்பாக என்ன பண்ணாலும் அந்த பாப் கார்ன் மட்டும் மாறக்கூடாது என கேட்டுக் கொண்டனர். பாப் கார்ன மட்டும் மாற்றினா உங்க பிசினஸ் எடுபடாது என சிலர் எச்சரிக்கை விடுத்தனர். அதோடு Donuts, ஐஸ் கிரீம் போன்றவற்றின் சுவையும் சத்யம் அளவுக்கு வராது என்கிறனர் பலர்.
நெட்டிசன்களின் இந்தக் கருத்துகளை பார்த்த எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் தங்களது இந்த முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் சத்யம் சினிமாஸை மேம்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தக அளவில் தங்களை பெரிதுபடுத்த இது உதவுமென்றும் கூறியிருக்கிறார்கள். அத்தோடு “சினிமா ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கும், சத்யம் தியேட்டரில் மட்டுமே கிடைக்கும் உணவுப் பொருட்களின் எந்த மாற்றமும் வராது. தற்போது உள்ளது போலே அனைத்தும் கிடைக்கும்” எனத் தலைமை செயல் அதிகாரி கிரண் ரெட்டி தெரிவித்துள்ளார்.
எங்கே தங்களது பாப் கார்னுக்கு பங்கம் வந்துவிடுமோ என்ற நெட்டிசன்களுக்கு இது நிம்மதியை கொடுத்துள்ளது. மேலும் சத்யம் என்ற பெயர் மாற்றப்படாது என்பதையும் அந்த விளக்கத்தில் எஸ்.பி.ஐ. நிறுவனம் தெரிவித்துள்ளது. சத்யம் வரும் சினிமா ரசிகர்கள் தொடர்ந்து வர வேண்டும் என்றும், அனைவருக்கும் நன்றி என்றும் எஸ்.பி.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.