தமிழ்நாடு

“தூய்மை இந்தியா திட்டம் வேலூரில் செயல்படுகிறதா? ” - தங்க மகன் சதீஷ் சிவலிங்கம் வேதனை

Rasus

பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், அரசாங்க ஊழியர்களை இனியும் நம்பி பயனில்லை எனக்கூறி, சுற்றுப்புற தூய்மை பணியில் ஈடுபட்டிருக்கிறார் சதீஷ் சிவலிங்கம்.

வேலூரை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம். இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர்களில் இவரும் ஒருவர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இவர் காமென்வெல்த் போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்றிருக்கிறார்.

இந்நிலையில் இவர் ‘தூய்மை இந்தியா’ திட்டம் வேலூரில் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பலமுறை புகார் கொடுத்தும் நகராட்சி அலட்சியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்  “ கடந்த சில தினங்களுக்கு முன் எங்கள் பகுதியில் தண்ணீர், சேர் ஆகியவதை தேங்கியிருப்பது குறித்து புகார் தெரிவித்தேன். ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கான மொபைல் ஆப்பிலும் புகார் செய்தேன். அதில் தீர்வு காணப்பட்டுவிட்டதாக வருகிறது. ஆனால் இங்கு எதுவுமே நடக்கவில்லை.

நாள் செல்ல டெங்கு கொசுக்கள் அதிகமாகியிருக்கிறது. இதுகுறித்தும் புகார் அளித்தேன். ஆனாலும் எந்தப் பயனில்லை. இதனால் நான் மற்றும் எனது நண்பர்கள் சிலர் ஒன்றிணைந்து நாங்களே தூய்மை பணியிலே ஈடுபட்டோம். அதிகாரிகளுக்காக காத்திருந்து அதற்குள் டெங்கு ஏதாவது வந்துவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக நாங்கள் இதனை எடுத்திருக்கிறோம். நீங்களும் யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். உங்கள் பகுதி குப்பைகளை நீங்களே சுத்தம் செய்துவிடுங்கள். கண்டிப்பாக ஆரோக்கியமாக வாழலாம்” எனக் கூறியுள்ளார்.