தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு- சாட்சியங்கள் அழிக்க வாய்ப்பு என சிபிஐ எதிர்ப்பு

சங்கீதா

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பிணைக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். விசாரணையின் போது, இந்த வழக்கில் 105 சாட்சிகளில் 22 பேர் மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையைக் காரணம் காட்டி தன்னை நீதிமன்றக் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என ரகுகணேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள சக்தி மக்களைக் காப்பாற்றுவதற்காகதான் என்றும், ஆனால் இந்த வழக்கில் அதற்கு மாறாக 2 பேர் காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக விசாரணையில் தாமதம் ஏற்பட்டது என்று கூறிய சிபிஐ அதிகாரிகள், முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் ரகுகணேஷுக்கு பிணை வழங்கும் பட்சத்தில் சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறினர். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.