தமிழ்நாடு

சசிகலா குடும்பம் தவறுக்கு மேல் தவறு செய்கிறது: ஓ.பி.எஸ்

சசிகலா குடும்பம் தவறுக்கு மேல் தவறு செய்கிறது: ஓ.பி.எஸ்

webteam

சசிகலா குடும்பம் தவறுக்கு மேல் தவறு செய்கிறது. அந்தக் குடும்பம் அதிமுகவில் இருக்கக் கூடாது என்ற தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பெரியகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆர்.கேநகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டிடிவி. தினகரன் நிறுத்தப்பட்டார். எங்களது அணி சார்பில் அவைத்தலைவர் மதுசூதனனை நிறுத்தினோம். அங்கு வாக்காளர்களுக்கு தினகரன் சார்பில் ஓட்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொடுத்து முறைகேடு செய்தனர். அதைத் தொடர்ந்து வருவார்துறையினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது. ஆவணங்களை கைப்பற்றி முறை கேடு நடந்தது என நிரூபிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. அடுத்து இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றுவது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முறைகேடாக தரகருக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து அதை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்து தினகரனுக்கும் சம்மன் அனுப்பி இருக்கிறனர். ஆக எந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்தில் அதிமுக சென்று விடக்கூடாது என்று வலியுறுத்தி வந்தோமோ, அந்தக் குடும்பம் தவறுக்கு மேல் தவறு செய்து தமிழகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.

2011ம் ஆண்டு சசிகலாவை ஜெயலலிதா விலக்கி வைத்தார். சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் 16 பேர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக்கப்பட்டனர். அடுத்த 4 மாதத்திற்கு பிறகு அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுத்த பிறகு ஜெயலலிதாவின் உதவியாளராக மட்டுமே சசிகலா மட்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால் விலக்கப்பட்ட அவரது உறவினர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. சசிகலாவின் உறவினர்கள் யாரும் வரக்கூடாது என்பதுதான் ஜெயலலிதாவின் உறுதியான நிலைப்பாடு.

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது சட்டத்திற்கும் கட்சி விதிகளுக்கும் புறம்பானது. கழக உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவதுதான் கட்சியின் விதி. அப்படி இருக்கையில், அவரது நியமனம் செல்லாது. அந்த அடிப்படையில்தான் அவரது பொதுச்செயலாளர் நியமனம் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சிறப்பு மனுவை அளித்துவிட்டு வந்தோம்.

சசிகலாவின் நியமனே செல்லாது என்கிறபோது அவரால் கட்சியை விட்டு மற்றவர்கள் நீக்கப்பட்டதும் செல்லாது. அவரால் புதிதாக நியமிக்கட்ட பதவிகளும் செல்லாது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தங்களது கொள்கையிலும் மாற்றமில்லை என்று அவர் கூறினார்.