தமிழ்நாடு

காணொலி காட்சி மூலம் ஆஜராகிறார் சசிகலா

Rasus

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையில், காணொலிக் காட்சி மூலம் ஆஜராக சசிகலாவுக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சசிகலா மீது 1996-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்ய சசிகலா நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா தரப்பில், காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு வைக்கப்பட்டது. அந்த மனுவில் உடல்நலக்குறைவு காரணமாக தம்மால் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது என சசிகலா கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது சசிகலாவின் கோரிக்கையை நீதிபதி ஏற்றார். மேலும், இதுதொடர்பாக கர்நாடக சிறைத்துறை, உள்துறை ஆகியவற்றிடம் அனுமதியைப் பெற்று அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

காணொலிக் காட்சியில் எந்த மொழியில் பதிலளிப்பீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, 2 வாரத்தில் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.