அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பிஎம்டி கல்லூரி எதிரே உள்ள திடலில் நேற்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சசிகலா கலந்து கொண்டார். முன்னதாக விழா மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி பின்னர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் சசிகலா பேசுகையில், “ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஏழை, எளிய, பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். பெண்சிசுக் கொலையை தடுக்க தொட்டில் குழந்தை திட்டம், பெண்களின் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்தார். ஆனால், திமுக தற்போது மக்களை கசக்கி பிழிந்து வருகிறது. திமுக அரசாங்கத்தால் தற்போது ரேசன் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை. பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணம் செய்வதில் பேருந்து கிடைப்பதில் சிரமம் உள்ளது.
திமுக விளம்பர ஆட்சி நடத்திக்கொண்டுள்ளது. காவல்துறையை வைத்துக்கொண்டு குறிப்பாக போக்குவரத்து காவலர்களை வைத்துக்கொண்டு படிக்கச்செல்லும் மாணவ, மாணவிகளிடம் அபராதத்தை மட்டும் வசூல் செய்கின்றனர். மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று ஏராளமான திட்டங்களை தமிழகத்திற்கு செய்தவர் ஜெயலலிதா. ஆனால் குடும்பநலனை முன்னிறுத்தி மத்திய அரசுடன் சுய விளம்பரத்திற்காக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது திமுக. புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி மக்களை ஏமாற்றி காலத்தை நகர்த்தி விளம்பர ஆட்சி செய்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என திமுக பகல்கனவு காண்கின்றனர்.
திமுகவிடம் இருந்து தமிழக மக்களை நம்மால் மட்டுமே காப்பாற்ற முடியும் என மக்கள் நம்புகின்றனர். ஜெயலலிதா மீது கொண்ட அன்பால் மக்கள் அம்மா என்று அழைத்தானர். ஆனால் திமுகவினர் தற்போது அப்பா வேஷம் போட ஆரம்பித்துள்ளனர். பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. காவல்நிலையத்தையே ரவுடிகள் தாக்கும் நிலை உள்ளைது. திமுகவின் வேஷம் கலையும் நேரம் வந்துவிட்டது.
தனக்கு பின்னும் அதிமுக 100 ஆண்டு காலம் செயல்படும் ஜெயலலிதாவின் கனவை கோடிக்கணக்கான தொண்டர்கள் சுமந்து நிற்கின்றனர். தன்னலம் மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கழகம் அதிமுக பல நெருக்கடிகளைச் சந்தித்தது. அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தன்னலம் மறந்து பொதுநலத்துடன் ஒன்று சேர வேண்டும்.
நரகத்திற்குச் சென்ற மனிதர் ஒருவன் செல்லும் வழியில் சிலந்தியை மிதிக்காமல் சென்றதால் சொர்க்கத்தில் இருப்பவர்கள் சிலந்தியின் நூலைப் பிடித்து சொர்க்கத்துக்கு வருமாறு கூறினர். சிலந்தியின் நூலைப் பிடித்து சொர்க்கத்திற்கு சென்ற மனிதன் ஒருவன் அதே நூலிழையை பிடித்து சொர்க்கத்திற்கு வந்த இரண்டு மூன்று பேரை கீழே மிதித்து தள்ளினான். இதனால் அந்த நூலிலையில் சொர்க்கத்திற்கு மேலே சென்ற மனிதனும் அவர்களோடு கீழே விழுந்து விட்டான்.
யாராக இருந்தாலும் விருப்பு வெறுப்பின்றி தன்னலம் இல்லாமல் ஒன்றிணைந்தால் தான் வெற்றிபெற முடியும். இதுவே தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும். தீய சக்தியான திமுகவை வீழ்த்தி ஜெயலலிதா வளர்த்தெடுத்த அதிமுகவை வெற்றி பெற வைக்க அதிமுக ஒன்றிணைந்தால் தான் முடியும் என அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
தொண்டர்களின் எண்ணத்தை ஈடேற்றம் வகையில் அதிமுகவை ஒருங்கிணைக்க நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். எனது இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். அதிமுக ஒன்றுபடும் அதிமுக வெற்றி அடையும். ஜெயலலிதா பிறந்த நன்னாளில் தொண்டர்களுக்கு இதை சொல்வது நான் ஒரு கடமையாக எண்ணுகிறேன். ’ஜெ ஜெயலலிதா எனும் நான்’ என எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ அப்போதெல்லாம் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள” எனப் பேசினார்.