தமிழ்நாடு

சசிகலாவுக்கு பரோல் பெற வழக்கறிஞர்கள் தீவிரம்

சசிகலாவுக்கு பரோல் பெற வழக்கறிஞர்கள் தீவிரம்

webteam

சிறையில் உள்ள சசிகலாவுக்கு ஓரிரு நாளில் பரோல் மனு தாக்கல் செய்யப்படும் சிறைத்துறை அதிகாரிககளை சந்தித்த சசிகலா வழக்கறிஞர் அசோகன் தெரிவித்தார்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹாரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராசனை காண சசிகலாக்கு பரோல் கோரப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த அக்டோபர் மாதத்தில் இதே காரணமாக சசிகலா ஜந்து நாட்கள் பரோலில் வந்திருந்தார். அதனால் ஒரு முறை பரோல் வழங்கினால் மீண்டும் பரோல் வழங்க ஆறு மாதம் இடைவெளி இருக்கவேண்டும் என சிறைத்துறை சார்பில் தெரிவித்தனர். 

இதனையடுத்து இன்று சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் அசோகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை துணை கண்காணிப்பாளர் சுந்தரிடம்  ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா வழக்கறிஞர் அசோகன் ”சசிகலாவுக்கு பரோல் தொடர்பாக இது வரையில் மனு அளிக்கப்படவில்லை என்றும் இதில் சட்ட சிக்கல்கள் உள்ளதால் பரோல் வழங்குவது தொடர்பாக சிறைத்துறை விதிமுறைகள் என்ன என்பது தொடர்பாக எழுத்து பூர்வ ஆவணங்கள் கோரப்பட்டு உள்ளது என தெரிவித்தார். மேலும் ஆவணங்கள் கிடைத்த பின்னர் சட்ட ஆலோசனைகள் செய்யப்பட்டு ஒரிரு நாட்களில் பரோல் மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து  நாளை அல்லது நாளை மறுநாள் சிறைத்துறை ஆவணங்கள் கிடைக்கும் என்றும் அதன் பின்னர் பரோல் மனு அளிப்பதா அல்லது நீதிமன்றத்தை அணுகுவதா என தெரியவரும் என்றும் அசோகன் தெரிவித்தார்