தமிழ்நாடு

சரண் அடைந்தார் சசிகலா

சரண் அடைந்தார் சசிகலா

webteam

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹராவில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கியிருந்த 4 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்‌, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து நண்பகல் 12 மணி அளவில் புறப்பட்ட சசிகலா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்றார். அங்கு, மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, திடீரென உணர்ச்சிவசப்பட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமது கையால் 3 முறை அடித்து சபதம் செய்தார். அதனைத் தொடர்ந்து ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்குச் சென்று சசிகலா தியானம் செய்தார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைவதற்காக சசிகலா சாலைமார்க்கமாக கார் மூலம் பெங்களூரு சென்றார். சுமார் 5.15 மணியளவில் பெங்களூரு பரப்பன அக்ரஹராவில் உள்ள பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன் சசிகலா, இளவரசி ஆகியோர் சரண் அடைந்தனர். ஆனால் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுதாகரன் சரண் அடையவில்லை.