திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பங்கேற்கவிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த விழாவில் நலத்திட்ட உதவிகளை திவாகரன் வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு மற்றும் எம்.பி,. எம்எல்ஏக்கள் பங்கேற்பதாகவும் அழைப்பிதழ் அச்சிடப்பட்டது. இதற்காக பந்தல்கால் நடப்பட்டு திவாகரன் மேற்பார்வையில் ஏற்பாடுகள் நடந்துவந்தசூழலில், விழா ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 15 ஆம் தேதி திருவாரூரில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், திவாகரனின் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விழா, அவரது அரசியல் பிரவேசமாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் விழா ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.