தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை

Sinekadhara

வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மீண்டும் முறையிடப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு கடந்த 30 ஆண்டுகளாக போயஸ் கார்டன் முகவரி மூலம், ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்களித்து வந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ல் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு போயஸ் கார்டன் இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இதனால் அங்கு வசித்த சசிகலா, இளவரசி உள்ளிட்ட 19 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி உள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே மனு அளித்திருந்தார். ஆனால், இதுவரை சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாததால், அமமுக நிர்வாகியும் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளருமான வைத்தியநாதன் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் சசிகலா, இளவரசியின் பெயர்கள் மட்டுமல்லாது, 19 ஆயிரம் அமமுக தொண்டர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் முறையிட்டுள்ளார்.