பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலாவுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்ததால் விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 27 ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனைக் காலமான 4 ஆண்டுகாலம் முடிந்ததையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலும் குறைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி அவர் தொடர்ந்து நல்ல முறையில் சுவாசிப்பதாகவும், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பெங்களுருவில் ஓய்வெடுக்கும் சசிகலா, வரும் பிப்ரவரி 3 அல்லது 5 ஆம்தேதி தமிழகம் திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.