ஜெயலலிதாவின் இல்லத்தில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர், அடுத்ததாக பெங்களூருவில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களுக்குச் சொந்தமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் இருக்கும் இடங்களில் கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
அங்கு சசிகலா இருந்த அறையில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். இதனையடுத்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு சிறையிலுள்ளார்.