பண மதிப்பிழப்பின்போது அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடியை கடனாக கொடுத்த சசிகலா..?
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சசிகலா, அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடி கடன் கொடுத்தது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து "தி இந்து" ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பணிமதிப்பிழப்பு நடவடிக்கை காலகட்டத்தில் ரூ.1,674.50 கோடி மதிப்புள்ள சொத்துகளை சசிகலா வாங்கி குவித்தார் என்றும் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 30- ஆம் தேதி வரை இந்த பணபரிமாற்றம் நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எந்த எந்த சொத்துக்களை யாரிடம், எவ்வளவு தொகைக்கு சசிகலா வாங்கினார் என்பதும், இதில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு கைமாறியது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவின் நெருங்கிய உறவினர் சிவகுமார் மூலம் பல்வேறு பணபரிமாற்றங்கள் நடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சொத்துகள் வாங்கியது தவிர வேறு விதமாகவும் செல்லாத பணத்தை புதிய நோட்டாக மாற்ற சசிகலா ஏற்பாடு செய்ததாகவும், இந்தப் பணத்தை வைத்து பலருக்கு நிதி கொடுத்து அதிலிருந்து வட்டி பெறும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதனை பயன்படுத்தி அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடி பழைய நோட்டுகளை கடனாக கொடுத்துள்ளார். அரசு கட்டடங்கள், அரசு உதவி பெறும் பள்ளி கட்டடங்கள் மற்றும் அரசு டெண்டர்களை எடுத்த காண்டிராக்டர்களுக்கு ரூ.240 கோடி கடனாக கொடுக்க பேரம் பேசப்பட்டது. இதில் ரூ. 237 கோடி ரூபாய் செல்லாத ரூபாய் நோட்டுகளாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பணத்துக்கு ரூ.7.5 கோடி கமிஷனாக பெறப்பட்டது. பணத்தை ஒரு வருடத்துக்குள் திருப்பித் தர வேண்டும். தாமதமானால் 6 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இந்த பணம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பின்னர் இந்த பணம் ஒப்பந்ததாரர்கள் மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு சசிகலா பினாமிகள் மூலம் புதிய பணமாக மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ரூ.101 கோடியும், அதே ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ரூ.136 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வருமான வரித்துறை விசாரணையில் வெட்டவெளிச்சமாக தெரிய வந்துள்ளது.