சசிகலா புதிய தலைமுறை
தமிழ்நாடு

தென்னந்தோப்பு சின்னத்துடன் கட்சியின் பெயரும் அறிவிப்பு.. தேர்தல் களத்தில் சசிகலா!

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்திய நிலையில், இன்று தன்னுடைய புதிய கட்சியின் பெயரையும் அறிவித்துள்ளார்.

Prakash J

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்திய நிலையில், இன்று தன்னுடைய புதிய கட்சியின் பெயரையும் அறிவித்துள்ளார். ’அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என தன் கட்சியின் பெயரை அறிவித்ததுடன், 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தையும் தேர்வு செய்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியையும், திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர்,அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேநேரம், கடந்த 2022ஆம் ஆண்டு திவாகரன் தனது கட்சியை சசிகலா தலைமையின்கீழ் கொண்டுவந்தார். இந்த நிலையில்தான், 2026 தேர்தலில் சசிகலா தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

sasikala

அதை உறுதிப்படுத்தும் விதமாக, ராமநாதபுரம் ​மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த பிப். 24ஆம் தேதி சசிகலாவின் ஆதரவாளர்கள் நிகழ்வு ஒன்றை நடத்தினர். அதில் கலந்துகொண்ட சசிகலா, புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தவிர, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை வி.கே.சசிகலா அறிமுகப்படுத்தினார். புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது கட்சியின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ’அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என தன் கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். தவிர, தன் கட்சிக்கு 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தையும் தேர்வு செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் தனிமரமாக வரவில்லை; தோப்புடன்தான் வந்திருக்கிறோம். நீங்கள் இந்த சின்னத்தை நன்றாகக் கவனிக்க வேண்டும்.

நாங்கள் எப்போதுமே ஒற்றுமையை விரும்புகிறவர்கள். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தவிர, வேறு எண்ணமே எனக்குக் கிடையாது. அதனால் நான் மக்களோடு இருப்பேன் என்பதற்கு இந்தச் சின்னமே ஒரு சான்று. ஒரு கூட்டுக்குடும்பம்போல், இந்தச் சின்னம் அமைந்திருக்கிறது. இது, மக்களுடைய சின்னம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டிலும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளர்கள் வருவார்கள். அது உங்கள் வீட்டுச் சின்னம். அது மக்களுக்கான சின்னம். நிச்சயமாக தமிழக மக்கள் எங்களோடு இருப்பார்கள். பாண்டிச்சேரி மக்களும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்” என்றார்.