மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்ததாக வெளியிடப்பட்ட வீடியோ உண்மையானது தான் என ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் ஐஒபி வங்கி மேலாளர் மகாலட்சுமி, மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், சாந்தாராம் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜசெந்தூரபாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது மருத்துவர் ஜெயஸ்ரீ கோபாலிடம் வீடியோ தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்ததாக வெளியிடப்பட்ட வீடியோ, அங்கு எடுக்கப்பட்டது தான் எனக் கூறினார். மேலும் கருவி ஒன்றை அவர்களுக்கு கொடுத்ததாகவும் அதன் மூலம் 15நிமிடத்திற்கு ஒரு முறை அவர்களின் சர்க்கரை அளவை கண்காணிக்க வழங்கப்பட்டது என்றார். மேலும் உடல்பருமன் குறைக்க அறுவைசிகிச்சை செய்ய வலியுறுத்திய போது நான் உணவுமுறை மூலமே குறைத்து கொள்வதாக ஜெ கூறினார் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சாந்தாராமிடம் விசாரணை மேற்கொண்டதில், 2000ஆம் ஆண்டில் இருந்து தாம் ஜெயலிதாவிற்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அதற்கு முன்பிருந்தே ஜெயலலிதாவிற்கு நீரிழிவு நோய் இருந்ததாகவும் சாந்தாராம் கூறினார். மேலும் அவரிடம் ஒரு நாள் இனிப்பு அதிகமாக வழங்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றதைக் கொண்டாட ஜெயலலிதா இனிப்பு சாப்பிட்டதாகவும், குறிப்பிட்ட கலோரி அளவிற்குள் கொடுக்கப்பட்டதாக மருத்துவர் சாந்தாராம் விசாரணையில் தெரிவித்ததாக வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
இதனையெடுத்து ஐஓபி வங்கியின் மேலாளர் மகலாட்சுமிடம் அவர் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா பிறந்தநாளுக்கு சசிகலா கார் பரிசாக வாங்க லோன் பெற்றனர் அதனை திரும்ப செலுத்திவிட்டார். அதேபோல ஜெயலலிதாவும் சசிகலாவின் பிறந்தநாளக்கு கார் பரிசு வழங்க லோன் வாங்கி அதனை திருப்பி செலுத்திவிட்டார். அதேபோல விவேக் அவர்களுக்காக வாங்கிய கல்விக்கடனும் அடைக்கப்பட்டுவிட்டது. மேலும் ஜெ இறந்தபிறகு அவர்களுடைய வங்கி கணக்கு குறித்து கேட்பது வருத்தமளிப்பதாகவும் ராஜசெந்தூரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.