கஜா புயல் பாதித்த இடங்களை மத்தியக் குழு இரவில் ஆய்வு நடத்த கூடாது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இன்று காலை பருத்திக்கோட்டை பகுதியில் சாலை ஓரங்களில் இருந்த மரங்களின் சேதம் குறித்தும், விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும் மத்தியக்குழு ஆய்வு செய்தது.
பின்னர் ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சேதமடைந்த வீடுகளை மத்தியக்குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து புலவன்காடு கிராமத்தில் உள்ள தென்னை மர தோப்பினை மத்தியக்குழுவினர் ஆய்வு செய்த போது, அப்பகுதி தென்னை விவசாயிகள் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதனர்.
தென்னை மரங்களின் சேதம் குறித்து அதிகாரிகளிடமும், அப்பகுதி மக்களிடமும் ஆய்வுக்குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் புயல் பாதித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மத்திய ஆய்வுக்குழு அதிகாரிகள் பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட திப்பியகுடி துணை மின் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் பட்டுக்கோட்டை தாலுகா புதுக்கோட்டை உள்ளூர் என்ற கிராமத்தில் புயல் பாதித்த இடங்களை மத்தியக்குழு ஆய்வு செய்தது.
சற்று நேரம் முன்பு கஜா புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய மத்திய குழு நாகை மாவட்டத்திற்கு வந்துள்ளது. ஆய்வுக்குமுன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கஜா புயல் பாதித்த இடங்களை மத்தியக் குழு இரவில் ஆய்வு நடத்த கூடாது என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். மேலும் இரவு நேரங்களில் ஆய்வு நடத்தினால் சேதங்களை சரியாக கணக்கிட முடியாது எனவும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.