தமிழ்நாடு

கவுசல்யா சுயமரியாதை மறுமணத்திற்கு மாலையெடுத்துக் கொடுத்த சங்கரின் பாட்டி

webteam

கவுசல்யாவின் மறுமணத்தில் உடுமலை சங்கரின் தந்தை வேலுசாமி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். 

சாதி ஆணவப்படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கவுசல்யாவின் சுயமரியாதை மறுமணம் இன்று கோவையில் நடைபெற்றது. கோவை வெள்ளலூரைச் சேர்ந்த நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி என்பவரை கவுசல்யா சுயமரியாதை மறுமணம் செய்துகொண்டார். கோவையிலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் இந்த இணையேற்பு விழா நடைபெற்றது. 

கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணம் முடிந்து பறையிசை முழங்க கவுசல்யா - சக்தி தம்பதி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணவர் சக்தியுடன் சேர்ந்து கவுசல்யா பறையிசைத்தடி நடனமும் ஆடினார். இந்த திருமணம் சங்கரின் குடும்பத்தாரின் முழு ஆதரவுடன் நடைபெற்றது. சங்கரின் பாட்டி, மாலை எடுத்து கொடுத்து இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். ஆனந்த கண்ணீரோடு கவுசல்யாவுக்கும், சக்திக்கும் சங்கரின் குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடைய செய்தது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுசல்யா, “சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரும் வரை சக்தியுடன் இணைந்து போராட்டுவேன். சாதி ஒழிப்பு களத்தில் எனது கணவாரன பறையிசை கலைஞர் சக்தியுடன் இணைந்து தொடர்ந்து இயங்குவேன். எங்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையில் கோரிக்கை வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.