தமிழ்நாடு

“எட்டு முறை சந்தியாவுக்கு மொட்டையடித்தார்”- கணவர் மீது உறவினர் குற்றச்சாட்டு

“எட்டு முறை சந்தியாவுக்கு மொட்டையடித்தார்”- கணவர் மீது உறவினர் குற்றச்சாட்டு

webteam

சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்ட சந்தியாவை அவரது கணவர் மொட்டையடித்து சித்தரவதை செய்ததாக பெண்ணின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கன்னியாக்குமரியைச் சேர்ந்த சந்தியா கொல்லப்பட்ட வழக்கில் அவரது கணவரும் திரைப்பட இயக்குநருமான பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தியா கணவர் பாலகிருஷ்ணன் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். நடத்தையில் சந்தேகம் கொண்ட பாலகிருஷ்ணன் சந்தியாவுக்கு 7, 8 முறை மொட்டை அடித்து சித்ரவதை செய்ததாகவும் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தி சந்தியாவை கண்காணித்து வந்ததாகவும் குற்றஞ்சாட்டினர்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி பாலகிருஷ்ணனுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என சந்தியாவின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சந்தியாவின் உறவினர்கள் செய்தியாளருக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சந்தியாவின் சித்தி உஷா, “ சந்தியா ஒரு வெகுளி. அவளின் குணம் பச்ச பிள்ளை போன்றது. எல்லோரிடமும் சிரித்து பேசுவாள். சந்தியாவுக்கு இது ஒரு வழக்கமாகி போனது. அவள் தவறாக நடக்க வாய்ப்பே இல்லை. பாலகிருஷ்ணனை டிஎன்.ஏ பரிசோதனை எடுக்க வேண்டும். அவர் ஒழுக்கமில்லாதவர்.” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து சந்தியாவின் தங்கை விஜி கூறுகையில் “ கல்யாணம் ஆன நாள் முதலே அவர்களுக்குள் சண்டை இருந்து வந்துள்ளது. அடிக்கடி சந்தியா தனது அம்மாவுக்கு போனில் தொடர்பு கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறுவார். அவர்களும் போய் பார்த்து சமாதானப்படுத்திவிட்டு வருவர். இது வழக்கம்தான். சந்தியா ஊருக்கு வரும்போதெல்லாம் கொடுமைப்படுத்துவதாக கூறி அழுவார். ஆனால் இந்த அளவுக்கு இப்படி செய்வார் என்பது தெரியவில்லை” என்றார்.