தமிழ்நாடு

பால் வண்டி எனக்கூறி மணல் கடத்தல் : விரட்டிச் சென்று பிடித்த போலீஸ்

பால் வண்டி எனக்கூறி மணல் கடத்தல் : விரட்டிச் சென்று பிடித்த போலீஸ்

webteam

புதுக்கோட்டையில் பால் வண்டி எனக்கூறி மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் அருகே நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த முருகையா என்பவரது மகன் ராஜதுரை. இவர் பெருமருதூர் அருகே மணல் அள்ளிக் கொண்டு, ‘பால் வண்டியை தடை செய்யாதீர்கள் அவசரம்’ என்ற வாசகம் பொருந்திய வாகனத்தில் மூடப்பட்ட நிலையில் எடுத்துச் சென்றுள்ளார். துரையரசபுரம் அருகே அந்த வாகனம் வந்து கொண்டிருந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் பால் வண்டியை நிறுத்த சொல்லியுள்ளார்.

வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால், அதனை காவலர் விரட்டிச் சென்றுள்ளார். பள்ளத்திவயல் என்ற பகுதியில் மணல் இறக்க வேண்டிய வீட்டின் முன்பு வாகனம் நின்றதை கண்டுள்ளார். இதையடுத்து வாகனத்தில் மணல் கடத்தப்பட்டதை உறுதி செய்த காவலர், ராஜதுரையிடம் விசாரித்துள்ளார். அப்போது காவலருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் காவலரை தாக்கி விட்டு அருகில் இருந்த வீட்டின் உள்ளே சென்று கண்ணாடி பாட்டில் மூலம் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்ட காவலர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும், மணல் கடத்திய ராஜதுரை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.