ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் விளைநிலங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கல்லப்பட்டி, நாராயணபுரம் மற்றும் வல்லந்தை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் இரவு பகலாக மணல் கொள்ளை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை, போலீசாரிடம் விவசாயிகள் நேரில் சென்று பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இந்த மணல் கொள்ளையால் விளைநிலங்கள், பனைமரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களும் அழிந்து வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கடும் வறட்சி பகுதியாக உள்ள இங்கு தற்போது குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் மணல் கொள்ளையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பதில் அளித்த கமுதி வட்டாட்சியர் முருகேசன் மணல் திருட்டை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.