தமிழ்நாடு

சென்னையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை

சென்னையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை

webteam

சென்னையில் ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆலந்தூர் சவுரி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ்(39).இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் ஆரோக்கிய ராஜிற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆரோக்கி யராஜ் வீட்டின் படுக்கையறைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை தாமஸ் உடனடியாக புனித தோமையார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு(45). இவரது மூத்த மகள் பவானி (25). இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விக்னேஷ் என்பவருடன் திருமணமாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக தனது தாய் வீட்டிற்கு பவானி வந்துள்ளார். அப்போது பவானியை அவரது தாய் துணி துவைக்க கூறி வற்புறுத்தியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பவானி படுக்கையறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை தேசிங்கு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் பார்க் டவுன் பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன்(82). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பால சுப்பிரமணியம் வீட்டின் மின் விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் பூக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் ஊரடங்கு நேரத்தில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.