தமிழ்நாடு

சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி

Veeramani

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக, இந்திய ஜனநாயகக் கட்சியும் சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் சென்னை வடபழனியில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது, தங்கள் கட்சிகள் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக இரு தலைவர்களும் அறிவித்தனர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்காத, சாதிமத பேதமின்றி மக்களுக்கு சேவை செய்யும் கொள்கையில் ஒருமித்த கருத்து உள்ள கட்சிகள் இணைந்திருப்பதாக ரவி பச்சமுத்து கூறினார். திமுக மிகச்சிறந்த கட்சி என்றும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு கௌரவத்தையும் அளித்ததாகவும் ரவி பச்சமுத்து குறிப்பிட்டார். அதே நேரத்தில், தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக ரவி பச்சமுத்து கூறினார்.

அதிமுக கூட்டணியில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாததால், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சரத்குமார் கூறினார். மக்கள் சேவை என்ற கொள்கையில் இருக்கும் கமல்ஹாசன் தங்கள் கூட்டணியில் இணைவார் என்று எதிர்ப்பார்ப்பதாகக் கூறிய சரத்குமார், ரஜினி மக்கள் மன்றத்தினரும் தங்களுடன் கரம் கோர்க்குமாறு அழைப்பு விடுத்தார். மாற்றத்துக்கான முதல் கூட்டணி என்று சரத்குமார் குறிப்பிட்டார். மக்கள் சேவை என்ற நிலைப்பாட்டில் உள்ள மேலும் சில முக்கிய கட்சிகளை கூட்டணிக்கு வர உள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.