விருதுநகரில் முடித்திருத்த நிலையம் ஒன்றில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இலவச முகக்கவசம் வழங்கப்படுவது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தை ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர பல்வேறு தனிநபர்களும் தங்களால் முடிந்த அளவிற்கு கொரோனாவை எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முடி திருத்தும் நிலையம் நடத்தி வரும் சங்கரலிங்கம் என்பவர், தனது நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி வருகிறார். அத்துடன் தனது நிலையத்தில் பணிபுரியும் 6 ஊழியர்களுக்கும் முகக்கவசம் அணிவித்திருக்கிறார்.
இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோன்று மற்ற நிறுவனங்கள் மற்றும் நிலையங்களும் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முகக்கவசங்களை வழங்க வேண்டும் என கோரிக்கையையும் எழுந்துள்ளது. முகக்கவசங்களுக்கு பணம் வாங்கிக்கொண்டாலும் பரவாயில்லை, அதனை நிறுவனங்களில் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.