தமிழ்நாடு

சேலம்: வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்குச் சென்ற பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி

webteam

சேலம் அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 63 சவரன் மற்றும் இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்துக்கு உட்பட்ட சாமிநாயக்கன்பட்டி லிங்க பைரவி நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. கணவரை பிரிந்து வாழும் விஜயலட்சுமி தனியார் மருந்து நிறுவனத்தில் மனிதவளத் துறை அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த 25 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மகளை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார்.

இதனிடையே இவரது கார் ஓட்டுநர் சிவா நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டில் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னையில் இருந்து வீடு திரும்பிய விஜயலட்சுமி, உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது வீட்டின் பீரோவில் இருந்த 63 சவரன் தங்க நகைகள் மற்றும் 2.5 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆணையாளர் நாகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அந்த குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பவர்கள் எவரேனும் ஈடுபட்டுள்ளனரா? அல்லது மர்ம நபர்கள் கைவரிசையா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.