சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சினிமா பாணியில் கத்தி முனையில் அடியாட்களை கொண்டு இளம் பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கண்டன். இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் செட்டிங்குறிச்சியில் வசித்து வந்தனர் .
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று நற்பகல் பெண் வீட்டார் அடியாட்களுடன் கத்தி கம்பு உள்ளிட்ட ஆயுதங்களோடு தனுஷ்கண்டன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்களை ஆயுதங்களை காட்டி துரத்தி விட்டு பெண்ணை தூக்கி சென்றனர்.
இந்த இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து எடப்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் ஆயுதங்களுடன் வந்த நபர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரோஷினி மற்றும் தனுஷ் கண்டன் இருவரும் ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றியபோது நட்பு ஏற்பட்டு கடந்தாண்டு ஜூலை மாதம் காதல் திருமணம் செய்து கொண்டு எடப்பாடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்கள் வர மறுத்ததால் பெண்ணை தனுஷ்கண்டவுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். கடந்த ஏழு மாதங்களாக இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில், நேற்று திடீரென பெண்ணின் உறவினர்கள் சில அடியார்கள் மற்றும் ஆயுதங்களுடன் வந்து பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தாலும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடாமல் தடுக்க காவல்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.