தமிழ்நாடு

தண்ணீரில் செல்லும் இருச்சக்கர வாகனம்: அசத்திய சேலம் மெக்கானிக்கல் மாணவர்

webteam

மேட்டூர் அருகே தமிழக கர்நாடகா எல்லையோர வன கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவன் தண்ணீரில் செல்லும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து அசத்தி வருகிறார்.

சாலையில் செல்லும் இருசக்கர வாகனத்தை பார்த்திருக்கிறோம். ஆனால் தண்ணீரில் செல்லக்கூடிய இரு சக்கர வாகனத்தை கண்டுபிடித்துள்ள அந்த இளைஞர் யார்? பார்ப்போம். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையோர வன கிராமமான காரைக்கால் அருகே இடும்பன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் சிங்காரவேல் - பூங்கொடி விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு தட்சிணாமூர்த்தி, செந்தில் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகன் தட்சிணாமூர்த்தி மேட்டூர் அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகிறார். இவர் தொடர்ந்து பல அறிவியல் சிந்தனைகளோடு பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே கார்பைட் கல் மூலம் கிடைக்கும் எரிவாயுவை கொண்டு இரு சக்கர வாகனம் இயக்கம், ஷாக் அடிக்காத மின்சாரம் மூலம் மின்சாதனம் இயக்குதல், போன்ற கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார்.

தற்பொழுது கடந்த ஆறு மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தட்சணாமூர்த்தி 100 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தை நிலத்திலும் தண்ணீரில் இயக்கக்கூடிய வகையில் அதனை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளார். இதன் மூலம் இறுதியில் ஆற்றை கடக்க முடியும் தண்ணீரில் சிக்கி கொண்டவர்களையும் விரைந்து சென்று மீட்கக் கூடிய வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் அடுத்த படி மேலே சென்று ஹீலியம் எரிவாயுவை பயன்படுத்தி ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு தேவையான பொருள் உதவியை தமிழக அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் அளித்தால் மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.