செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு, கேரளாவைச் சேர்ந்த 17 சுற்றுலா பயணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் மீண்டும் கேரளா திரும்ப, சேலத்தில் இருந்து கொச்சின் செல்லும் அலையன்ஸ் விமானத்திற்கு டிக்கெட் புக் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் 2:30 செல்ல புறப்பட வேண்டிய விமானம், 2:10 மணிக்கே சென்று விட்டது.
இதையடுத்து விமானத்தை தவற விட்ட 17 பயணிகளும் விமான நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். அப்;போது முறையான பதில் இல்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கேரளா பயணிகள் அலையன்ஸ் விமான நிறுவனம் மீது, ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரில் மதியம் 2.30 மணிக்கு சேலத்தில் இருந்து கொச்சின் புறப்பட வேண்டிய விமானம் 20 நிமிடங்கள் முன்னதாக புறப்பட்டுச் சென்று விட்டது.
இதனால் கொச்சின் செல்ல முடியாமல் தவிப்பதாகவும், அலையன்ஸ் விமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு இழப்பீடு கிடைக்க உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், முறையாக அறிவிப்பு கொடுத்தும் அவர்கள் தாமதமாக வந்ததாக விமான நிறுவனத்தினர் கூறினர்.