நாமக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரத்த நாளத்தில் உருவான அரியவகை கட்டியை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணுக்கு நெஞ்சுக் கூட்டில் உருவான கட்டியால் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்துள்ளார். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்த அரிய வகை ரத்தக் கட்டியை அகற்ற முடிவு செய்தனர்.
இந்நிலையில், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைவாணிக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி தலைமை மருத்துவர் ராஜராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஐந்து மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர்.
இந்த அறுவை சிகிச்சை செய்து முடித்த அரசு மருத்துவர்களுக்கு மருத்துவமனையின் முதல்வர் பாலாஜி நாதன் பாராட்டுகளை தெரிவித்தார். தமிழகத்தில் அரிதாக செய்யப்படும் அறுவை சிகிச்சை இது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரத்த நாளத்தின் வழியாக நெஞ்சுக் கூட்டில் உருவான இந்த கட்டி நுரையீரல் உள்ளிட்ட பகுதிகளை அழுத்தியதால் அந்த பெண்மணி பெரும் அவதிக்குள்ளாகி இருந்துள்ளார்.
இதனால் அவரது கணவரும் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறிய மருத்துவர்கள் தற்போது கலைவாணி நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் மீண்டும் மனைவியோடு சேர்ந்து வாழ கணவருக்கு மனரீதியான ஆலோசனைகள் வழங்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.