செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டியில் தனியார் நிறுவனத்தின் பெயிண்ட் இருப்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து மாவட்டம் முழுவதும் டீலர்களுக்கு பெயிண்டுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து குடியிருப்பு வாசிகள், உடனடியாக ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இரண்டு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முழுமையாக எரிந்து தீக்கிரையானது. தீ விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெயிண்ட் குடோனுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.