செல்வகணபதி
செல்வகணபதி pt web
தமிழ்நாடு

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டு பின் ஏற்பு!

Angeshwar G

செய்தியாளர் - மோகன்

1,749 வேட்புமனுக்கள் தாக்கல்

18-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல்19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 62 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

கனிமொழி வேட்புமனு தாக்கல்

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இதனையடுத்து, தகுதியுள்ள வேட்பாளர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

ஆ.ராசா வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டு பின் ஏற்பு

இந்நிலையில், திமுக வேட்பாளர் ஆ. ராசா மற்றும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் போன்றோரது வேட்புமனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டன. உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின் இருவரது மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சேலம் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளரான செல்வ கணபதியின் வேட்புமனு இன்று திடீரென நிறுத்திவைக்கப்பட்டது.

ஆ.ராசா

சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தமாக 39 பேர், 52 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனுக்களின் மீதான பரிசீலனை நடந்தது. செல்வகணபதி கடந்த 25 ஆம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிருந்தா தேவியிடம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அந்த வேட்புமனு இன்று திடீரென நிறுத்திவைக்கப்பட்டது. பின் அது ஏற்கப்பட்டது. இதன் பின்னணியை அறியலாம்...

காரணம் என்ன?

செல்வகணபதியின் வேட்புமனு மீது அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள செல்வகணபதிக்கு, சேலம் மேற்கு மற்றும் வடக்கு என இரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குரிமை இருப்பதாக தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதுமட்டுமின்றி செல்வ கணபதி தனது வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் சுடுகாட்டு கூரை ஊழல் தொடர்பான வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்டதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கொடைக்கானல் பிளஸ் ஒன் ஸ்டே ஹோட்டல் வழக்கு மற்றும் கலர் டிவி ஊழல் வழக்கு தொடர்பான விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. மேலும் சொத்து விவரங்களில் குளறுபடி என பல்வேறு பிரச்சனைகளை வேட்பாளர்கள் எழுப்பியதால் அவரது மனு பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவரது மனு ஏற்கப்படுமா? ஏற்கப்படாதா? என்ற சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக செல்வகணபதிக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவரது விளக்கம் பெறப்பட்ட பின்புதான் மனு மீதான விசாரணை தொடங்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான போட்டி நிலவும் சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளரது வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து சில மணி நேர ஆலோசனைக்குப்பிறகு, நிராகரிப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி மனு ஏற்கப்பட்டது.