சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டாரங்களில் பெய்த கனமழை காரணமாக தேங்காய்கள் அழுகிவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தாரமங்கலம் வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சிலர் கொப்பரை தேங்காய்களை வாங்கி, அவற்றை வெயிலில் காய வைத்து பருப்புகளை பிரித்தெடுக்கும் பணியை செய்து வருகின்றனர். அந்த வகையில் தேங்காய் பருப்புகளை பிரித்தெடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் டன் கணக்கில் தேங்காய்களை வாங்கி குவித்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக தேங்காய்கள் முளைத்தும், மழையில் நனைந்து அழுகியும் வீணாயின. மேலும் தேங்காயின் மட்டை உரிக்க முடியாமலும், உரித்த தேங்காய்களை வெய்யிலில் உலர்த்த முடியாமலும் போனது. இதேபோன்று மழையில் நனைந்த கொப்பரை மற்றும் தேங்காய்கள் அனைத்தும் அழுகியும், ஆயிரக்கணக்கான தேங்காய்கள் முளைப்பு ஏற்பட்டும் வீணாகியது.
இதனால், கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு சுமார் 20 முதல் 50 லட்சம் ரூபாய் வரை நஷ்டமும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தப்பகுதி விவசாயிகள் நிலத்தையும், நகைகளை அடகு வைத்து கொள்முதல் செய்த தேங்காய்கள் அனைத்தும் அழுகியதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.