தமிழ்நாடு

புறா பிடிக்க மாடியில் ஏறிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

webteam

சேலத்தில் புறா பிடிப்பதற்காக மருத்துவமனையின் மாடி மீது ஏறிய சிறுவன் தவறி விழுந்து படுகாயமடைந்தார். 

சேலம் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள தேவேந்திரபுறம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாது என்பவரின் 10 வயது மகன் மணிகண்டன். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து மருத்துவமனைக்கு சென்ற அந்த சிறுவன், மூன்று அடுக்கு கொண்ட அரசு சூப்பர் ஷ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பின்பகுதி வழியாக மொட்டைமாடி மீது ஏறியுள்ளான். 

அங்கு ஏராளமான புறாக்கள் வசிக்கின்றன. அந்த புறாக்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாடி மீது ஏறும் அளவுக்கு பாதுக்காப்பில்லாமல் இருந்தது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.