தமிழ்நாடு

சேலம்: மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்த லாரி; போக்குவரத்து பாதிப்பு

kaleelrahman

சேலம் அருகே கெமிக்கல் ஏற்றிவந்த லாரி மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்ததில் லாரி முழுவதும் சேதமடைந்தது. நான்கு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூருவிலிருந்து கெமிக்கல் மற்றும் பிரிண்ட் பொருட்களை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே சாலை வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் உரசி தீப்பற்றியுள்ளது. இதனைக் கண்ட லாரி ஓட்டுனர் வளைவில் வேகமாக திரும்பியுள்ளார். அப்போது லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லேசான காயம் அடைந்த ஓட்டுனர் தாமாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே விபத்துக்குள்ளான லாரி மளமளவென தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கெமிக்கல் பொருட்கள் என்பதால் சுமார் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரி உட்பட சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து காரணமாக ஓமலூர் சங்ககிரி பிரதான சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.