செய்தியாளர்: தங்கராஜூ
பெங்களூரில் இருந்து ஓமலூர் வழியாக, இந்திய அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வருவதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை உதவி ஆய்வாளர் பூபதி தலைமையில் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், கார் நிற்காமல் சேலம் நோக்கி வேகமாக சென்றது. இதைத் தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரட்டிச் சென்று காரை மடக்கிப் பிடித்தனர். இருப்பினும் காரில் இருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் காரில் சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் 66 மூட்டைகளில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.